மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை - அமைச்சர் உதயநிதி


மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை - அமைச்சர் உதயநிதி
x
தினத்தந்தி 18 Jan 2024 6:10 AM GMT (Updated: 18 Jan 2024 6:13 AM GMT)

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.

சென்னை,

சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான சுடர் தொடர் ஓட்டத்தை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகில் இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த சுடர், அண்ணா சாலையில் இருந்து 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை நாளை மறுநாள் பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகிறது.

இந்த சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

'சேலம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 3 முதல் 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 316 கிலோ மீட்டருக்கு சுடர் ஏந்தி தொடர் ஓட்டம் நடைபெறும். அதனை இறுதியாக சேலத்தில் தலைவரிடம் கொடுப்போம். 85 லட்சம் கையெழுத்துகள் நீட் தேர்வை விலக்கக்கோரி வாங்கி உள்ளோம். மாநாட்டின்போது அதை திமுக தலைவரிடம் ஒப்படைப்போம். பின்னர் நேரடியாக நானே குடியரசுத் தலைவரை சந்தித்து அதனை வழங்க இருக்கிறேன்.

ராமர் கோவில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை. அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதால்தான் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.'

இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story