மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி ஒரு பொய்யாட்சி - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்


மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி ஒரு பொய்யாட்சி - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்
x

கோப்புப்படம் 

தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சி என்பது மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியாக, மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதமில்லாத ஆட்சியாக, போதையில் மூழ்கியுள்ள ஆட்சியாக, சாராய சாம்ராஜ ஆட்சியாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், தி.மு.க. ஆட்சி 'செயலாட்சி' என்று முதல்-அமைச்சர் பதிவு செய்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டு தி.மு.க. ஆட்சி என்பது பொய்மையின் மொத்த உருவமாக காட்சி அளிக்கிறது.

1. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுநாள் வரை இந்த மானியம் வழங்கப்படவில்லை. இதனை செயலாட்சி என்று சொல்கிறாரா முதல்-அமைச்சர்?

2. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுநாள் வரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மின் கட்டணம் இரு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குப் பெயர்தான் செயலாட்சியா?

3. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க. அறிவித்தது. இந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஒரு வேளை இதற்கு பெயர்தான் செயலாட்சி போலும்!

4. 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என தி.மு.க. சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதா என்றால் இல்லை. இதைத் தான் செயலாட்சி என்று முதல்-அமைச்சர் கூறுகிறார் போலும்!

5. ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. இந்த வாக்குறுதி இதுநாள் வரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

6. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதா? செயல்படுத்தப்படாத வாக்குறுதியைத்தான் செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

7. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ உளுத்தம் பருப்பு தரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டதா? செயல்படுத்தப்படாத இந்த வாக்குறுதியைத் தான் செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

8. 90 நாட்களில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முடிக்கப்படும் என்ற வாக்குறுதி 900 நாட்கள் கடந்தும் நிறைவேற்றப்படவில்லையே.! ஒரு வேளை இதற்கு பெயர்தான் செயலாட்சியா?

9. ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதே! இதுதான் செயலாட்சியின் லட்சணமா?

10. அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தி.மு.க.வால் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மூன்றாண்டுகள் கடந்தும் 35,000 பணியிடங்கள் கூட நிரப்பப்படவில்லை என்பதுதான் யதார்த்தம். மாறாக, பல காலி பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதைத்தான் செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

11. தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே அளிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. மூன்று ஆண்டுகளாகியும் இதுபற்றி முதல்-அமைச்சர் வாய் திறக்கவில்லை. இதற்கு பெயர்தான் செயலாட்சியா?

12. புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை நிலை என்னவென்றால், இருக்கின்ற பணியிடங்களே நிரப்பப்படவில்லை. இதைப்போய் செயலாட்சி என்று சொல்கிறாரா முதல்-அமைச்சர்!

13. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வூதியப் பலன்களையே அளிக்காத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலத்தைத்தான் செயலாட்சி என்று சொல்கிறாரா முதல்-அமைச்சர்!

14. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி தி.மு.க.வால் அளிக்கப்பட்டது. ஆனால், இது சாத்தியமற்றது என்று நிதி அமைச்சரே கூறுகிறார். இந்த நடவடிக்கையை செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்!

15. 70-வயதுக்கு மேல் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி செயல்பாட்டுக்கு வந்துவிட்டதா என்றால் இல்லை. இதனைத்தான் செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்!

16. கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதுதான் செயலாட்சிக்கு உதாரணமா?

17. நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தி.மு.க. தேர்தல் சமயத்தில் அறிவித்தது. இந்த வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவில்லை. இதனை செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

18. நீட் தேர்வு ஒரே கையெழுத்தில் ரத்து செய்யப்படும் என்று மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. மூன்று ஆண்டு ஆகியும் ரத்து செய்யப்படவில்லை. இதுதான் செயலாட்சிக்கு எடுத்துக்காட்டா?

19. சென்னை நகரை வெள்ளப் பெருக்கிலிருந்து பாதுகாக்க சென்னை மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது. சென்னை நீரில் மூழ்கியது என்பதுதான் கள யதார்த்தம். மக்களின் பணம் வீணடிக்கப்பட்டது. இதைப் போய் செயலாட்சி என்று சொல்வது பொருத்தமா?

20. பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வாக்குறுதி செயல்படுத்தப்படவில்லை. இதுதான் செயலாட்சியா?

21. 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி குறித்து வாய் திறக்காததுக்கு பெயர் செயலாட்சியா?

22. நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை சீர் செய்வோம் என்று சொல்லி அதற்கு நேர்மாறாக அதனை பன்மடங்கு உயர்த்தி மக்களை நிதிச் சுமையில் ஆழ்த்தியுள்ளதற்குப் பெயர்தான் செயலாட்சியா?

23. சொத்து வரி, குடிநீர் வரி, வாகன வரி, பால் மற்றும் பால் பொருட்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி மக்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியதுதான் மிச்சம். ஒரு வேளை 'செயலற்ற ஆட்சியை 'செயலாட்சி' என்று சொல்வதுதான் திராவிட மாடல் போலும்.

24. அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆணை செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை. இதனைத்தான் செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

25. இடைநிலை ஆசிரியர்களுக்கான 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதனை செயலாட்சி என்கிறாரா முதல்-அமைச்சர்?

26. நகைக் கடன் ரத்து என்று சொல்லி பெரும்பாலான ஏழை எளிய மக்களை கடனாளிகளாக ஆக்கிய அரசு தி.மு.க. அரசு. இது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதனை செயலாட்சி என்று சொல்ல முடியுமா?

27. பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்ட நிலையில், தி.மு.க. ஆட்சியை செயலாட்சி என்று சொல்வது எவ்விதத்தில் நியாயம்?

28. அன்றாடம் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் நடைபெற்று வருகிறது. மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல், கள்ளச் சாராயம் காய்ச்சுதல் ஆகியவை தான் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கின்றன. தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர். அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், வீடு கட்டுவோர்கள், காவல் துறையினர் என அனைவரும் தி.மு.க.வினரால் மிரட்டப்படுகின்றனர். சில சமயங்களில் தாக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும் சக்தியை தி.மு.க. அரசு இழந்துவிட்டது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் காட்டாட்சி தர்பார் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். உண்மை நிலை என்னவென்றால், தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பது 'செயலாட்சி' அல்ல. 'செயலற்ற ஆட்சி, 'பொய்யாட்சி' நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை மறைத்து செயலாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறும் முதல்-அமைச்சருக்கு 'மனமறிந்து பொய் பேசினால் மனதே நம்மைத் தண்டிக்கும்' என்ற குறளை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களின் விருப்பத்திற்கிணங்க, தமிழ்நாட்டில் விரைவில் 'பொய்யாட்சி' தூக்கி எறியப்பட்டு 'செயலாட்சி' ஏற்படுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story