"நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த முயற்சியும் செய்யவில்லை" - எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநாடு நடத்துவதை தெரிந்தே, நீட் தேர்வை மையமாக வைத்து திமுக உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை,
நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக தொடர்ந்து ஏமாற்றிவருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நீட் தேர்வை அறிமுகம் செய்தது திமுக- காங்கிரஸ் கூட்டணிதான். நீட் தேர்வை ரத்து செய்ய புதிதாக எதையும் திமுக அரசு செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு பிரச்சனையை திமுக எழுப்பவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிராக திமுக நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு செயல்பட முடியுமா..?" என்று அவர் கூறினார்.
மேலும், "நீட் தேர்வுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை திமுக தொடர்ந்து ஏமாற்றிவருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த முயற்சியும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் மு.கஸ்டாலினுக்கு விவசாயிகளை பற்றியோ, தமிழக மக்களை பற்றியோ எந்த கவலையும் இல்லை. மதுரை அதிமுக மாநாட்டை கண்டு அஞ்சி திமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. அதிமுக மாநாடு நடைபெறும் நாளில் திமுக உண்ணாவிரதம் நடத்துவது வேண்டுமென்றே செய்யும் செயல். இந்தியாவே வியக்கும் வகையில் மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இருக்கும், மாநாடு தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட துறைகளிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.