திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு


திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x

தி.மு.க தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த பத்மாவதி தாயார் வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட்டாம் பூண்டியில் அ.தி‌.மு.க.வினர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி கொடியை எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தி.மு.க. தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தப்படும் என கூறினார்கள். ஆனால் அதன்படி உயர்த்தவில்லை. ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றார்கள் அதையும் செய்து தரவில்லை.

அ.தி.மு.க தான் ஏற்கனவே விவசாய கடன்களை ரத்து செய்தது. தி.மு.க. விவசாய கடன்களை ரத்து செய்யவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க.கொண்டு வந்தது. தி.மு.க. மாணவர்களுடைய கல்விக் கடனை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் ரூ.3 மட்டும் குறைத்து விட்டு தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் என்னிடம் தடையில்லா மின்சாரம் வழங்க சட்டமன்றத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். எந்த நேரத்திலும் தடையில்லா மின்சாரம் அ.தி.மு.க. அரசு வழங்கியது.

முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை படிப்படியாக குறைத்து வருகின்றனர். இதனை கண்டித்து முதியோர்களை ஒன்று திரட்டி அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story