தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது தி.மு.க. - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்


தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றியுள்ளது  தி.மு.க. - ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்
x

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தி.மு.க. ஆட்சி என்றாலே, குண்டு வெடிப்பு, கொலை, கொள்ளை, வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், சமூக விரோதிகளின் நடமாட்டம் ஆகியவை அதிகரிப்பது வாடிக்கை என்றிருந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்களின் விற்பனை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தீய சக்திகளின் நடமாட்டம் தமிழ்நாட்டில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக அணி துணை அமைப்பாளரின் வீடு, தங்கும் விடுதி மற்றும் அலுவலகங்களில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, அவற்றிற்கு சீல் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் வெளியானதையடுத்து, பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நிலையில், அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தி.மு.க.வினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. மொத்தத்தில், தி.மு.க.வினர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தி.மு.க.வினரின் இந்தச் செயல் தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் செயலாகும்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, அவற்றை சிறிய பொட்டலங்களில் வைத்து அதில் இனிப்புப் பண்டங்களை சேர்த்து பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், டெல்லியிலிருந்து ரெயில் மூலம் மதுரைக்கு கடத்தப்பட்ட 50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமின் போதைப் பொருளை வருவாய் புலனாய்வுத் இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதுதான் கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. அரசின் சாதனை. எதிர்காலத் தூண்களாகிய இளைஞர்களின் நலனில் முதல்-அமைச்சர் அவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை மேற்கொண்டவர்கள் மற்றும் இதன்மூலம் பயனடைந்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story