ஆதரித்து பாதுகாப்பது போல சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் தி.மு.க. வைத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி


ஆதரித்து பாதுகாப்பது போல சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் தி.மு.க. வைத்துள்ளது - எடப்பாடி பழனிசாமி
x

ஆதரித்து பாதுகாப்பது போல சிறுபான்மை மக்களை மாயாஜாலத்தில் தி.மு.க. வைத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இருந்து நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவைக்கு வெளியே சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

36 இஸ்லாமியர்கள் விடுதலை குறித்து இஸ்லாமிய அமைப்புகள் என்னிடத்தில் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. 14.2.1998 அன்று கோவையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் 16 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த 36 இஸ்லாமியர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியில் 15.11.2021 அன்று போடப்பட்ட அரசாணையால் அவர்களின் முன் விடுதலை தடைப்பட்டுள்ளது. அவர்களை விடுவிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் எங்களிடத்தில் கோரிக்கை வைத்தனர். அதன்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வலியுறுத்தினேன்.

அப்போது முதல்-அமைச்சர் திடீரென்று, அ.தி.மு க.வுக்கு என்ன அக்கறை வந்தது? இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை என்றார். இதற்கு பதில் சொல்வதற்கு எனக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை, அதைத்தொடர்ந்து நாங்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

யார் பாதுகாப்பு?

இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரசு பல திட்டங்களை கொண்டு வந்தது. அவர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் எங்கள் மேல் ஏன் எரிச்சல், கோபப்படுகிறார்? தி.மு.க. ஆட்சியில் உக்கடம் கோட்டைமேட்டில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்டபோது போலீசார் துப்பாக்கி சூட்டில் 19 இஸ்லாமியர்கள் இறந்தனர். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. பாதுகாப்பாக இருந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கிறபோது அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. வாக்காளித்தது. அவரை எதிர்த்து வாக்களித்தவர்கள் தி.மு.க.வினர். இஸ்லாமியர்களுக்கு தி.மு.க.வினர் என்ன நன்மை செய்தனர்? இதைமட்டும் சிறுபான்மை மக்கள் உணர வேண்டும்.

எங்கள் மேல் நம்பிக்கை

அ.தி.மு.க.தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மை மக்கள் எங்களை வந்து பார்க்கிறார்கள். இதுதான் முதல்-அமைச்சர் இவ்வளவு கோபம் கொள்வதற்கு காரணம். 36 பேர் விடுதலை தொடர்பான கோப்பு கவர்னரிடம் உள்ளதாக கூறுகிறார். இது தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையும் கிள்ளிவிடுகிற மாதிரி உள்ளது.

36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வோம் என்று மூலைக்கு மூலை தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர்தான், பயங்கரவாதத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்ற அரசாணையை கொண்டு வந்தார். வேண்டுமென்று திட்டமிட்டு அதை செயல்படுத்தியது தி.மு.க. அரசு.

மாயாஜாலம்

சிறுபான்மை மக்களை ஒரு மாயாஜாலத்தில் வைத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள்தான் ஆதரிப்பது போலவும், பாதுகாத்து உதவி செய்பவர்கள் போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி ஒரு வட்டத்திற்குள் வைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் சிறுபான்மை மக்கள் எங்களை நாடுகிறபோது அவருக்கு கோபம் வருகிறது. தமிழகம் முழுவதும் சிறுபான்மையினர் வாக்குகளை சிதற விட்டு விடுவோமோ என்ற அச்சத்தினால்தான் கோபம் வருகிறது. அந்த மாயத்தோற்றம் காணாமல் போகிற சூழ்நிலை வருகிறபோது இஸ்லாமியர்கள் விழித்துக் கொண்டார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டின் போது பல கைதிகள் விடுதலையானர்கள். அதில் இஸ்லாமியர்களும் அடங்கியுள்ளனர். பா.ஜ.க.வில் இருந்து நாங்கள் விலகிய பிறகு முதல்-அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது.

கொள்கை, கூட்டணி வெவ்வேறு

பா.ஜ.க.வுடன் தி.மு.க.வும் கூட்டணியில் இருந்துள்ளது. கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. முத்தலாக், சி.ஐ.ஏ. ஆகியவற்றில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏன் அ.தி.மு.க. வாக்களித்தது என்று கேட்டால், கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்; சில நிர்பந்தங்களுக்கு ஆளாகிறோம்; நமக்கு உடன்படாததாக இருந்தால்கூட அதை நிறைவேற்றப்படக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.

இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஏன் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று கர்நாடகா அரசிடம் தி.மு.க. கேட்கவில்லை.? கூட்டணி உடைந்து விடும் என்ற பயமா?

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story