கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை: முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்


கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு வேலை: முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள்
x

டாக்டர் விவேகானந்தனின் மனைவி தன் குழந்தைகளுடன், அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து வேண்டினார்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு, 11 அரசு மருத்துவர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு திமுக அரசு எதையுமே செய்யவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

குறிப்பாக உயிரிழந்த மருத்துவர்களில் ஒருவர்தான், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் காது, மூக்கு தொண்டை நிபுணராக பணியாற்றி வந்த டாக்டர் விவேகானந்தன். தனக்கு நிவாரணமும், அரசு வேலையும் தரப்பட, விவேகானந்தனின் மனைவி தன் குழந்தைகளுடன், அமைச்சரை 3 முறை நேரில் சந்தித்து வேண்டினார். இருப்பினும் அமைச்சர் மனம் இரங்கவில்லை.

கணவனை இழந்து தவிக்கும் தனக்கு அரசு வேலை தர வேண்டி, கண்ணீருடன் தமிழக முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் வைத்தார். இருந்த போதும் இன்னமும் முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை.

நம் முதல்-அமைச்சர், மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி மற்றும் குழந்தைகளை வரவழைத்து, ஒரே ஒருமுறை நேரில் சந்தித்தால், நிச்சயம் அவர்களின் வலியும், வேதனையும் என்ன என்பது தெரிய வரும்.

மக்களின் உயிரை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவரின் குடும்பம் தொடர்ந்து கண்ணீர் சிந்துவதை நம் முதல்-அமைச்சர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என நம்புகிறோம்.

எனவே வருகின்ற 22ம் தேதி மருத்துவர் விவேகானந்தன் உயிரிழந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை, தமிழக முதல்-அமைச்சர் தன் கரங்களால் வழங்கிட வேண்டுகிறோம். மேலும் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தையும் வழங்கிட நாம் வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story