வளர்ப்பு யானை சாவு


வளர்ப்பு யானை சாவு
x
தினத்தந்தி 15 Oct 2023 8:45 PM GMT (Updated: 15 Oct 2023 8:46 PM GMT)

முதுமலை தெப்பக்காடு முகாமில் மூர்த்தி வளர்ப்பு யானை இறந்தது. அதன் உடலுக்கு மாலை அணிவித்து வனத்துறையினர், பாகன்கள் அஞ்சலி செலுத்தினர்.

நீலகிரி


முதுமலை தெப்பக்காடு முகாமில் மூர்த்தி வளர்ப்பு யானை இறந்தது. அதன் உடலுக்கு மாலை அணிவித்து வனத்துறையினர், பாகன்கள் அஞ்சலி செலுத்தினர்.


மூர்த்தி யானை


நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. 58 வயதான கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு அளிக்கப்படுகிறது. இந்தநிலையில் பணி ஓய்வு பெற்ற 60 வயதான மூர்த்தி என்ற மக்னா யானை வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தது.


அதற்கு வனத்துறையின் கால்நடை மருத்துவக் குழுவினர் மற்றும் பாகன்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மிகவும் மோசமாகி மூர்த்தி யானை இறந்தது. தொடர்ந்து நேற்று மூர்த்தி யானையின் உடலை அடக்கம் செய்யும் பணி நடந்தது. முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமையில் வனத்துறையினர், பாகன்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் துக்கம் தாங்காமல் கண்ணீருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.


இறுதி அஞ்சலி


அப்போது ஆதிவாசி குடும்பத்தினர் மற்றும் பாகன்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு மூர்த்தி யானையின் உடல் தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது வன அதிகாரிகள் மற்றும் பாகன்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதேபோல் சக கும்கி யானைகளும் பிளிறியவாறு இறுதி அஞ்சலி செலுத்தின.


இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:-


25 பேரை கொன்றது


இறந்த மூர்த்தி வளர்ப்பு யானை, 1998-ம் ஆண்டுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 23 பேரை தாக்கி கொன்று இருக்கிறது. இதனால் கேரள முதன்மை தலைமை வார்டன் அந்த யானையை சுட்டு பிடிக்க அல்லது கொல்ல உத்தரவிட்டார்.


ஆனால், தமிழக எல்லை வழியாக கூடலூர் அருகே புளியம்பாரா பகுதியில் நுழைந்து 2 பேரை கொன்று விட்டது. இதைத்தொடர்ந்து அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு உயரதிகாரிகள் ஆணை வழங்கினர். அப்போது தெப்பக்காடு முகாமில் பணிபுரிந்து வந்த கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி 12.7.1998 அன்று வாச்சிகொலி என்ற இடத்தில் பிடித்தார்.


தொடர்ந்து முகாமுக்கு கொண்டு வரப்பட்டு, யானையின் உடலில் இருந்த அனைத்து காயங்களுக்கும் முறையாக மருத்துவம் செய்து குணப்படுத்தப்பட்டது. பின்னர் மூர்த்தி என அந்த யானைக்கு பெயரிடப்பட்டது. மூர்க்கத்தனமாக இருந்த அந்த யானை முதுமலையில் பழக்கப்படுத்திய பின்பு சாதுவாக மாறியது. இவ்வாறு அவர் கூறினார்.



Next Story