'மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்...' சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் - கமிஷனர் தகவல்


மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்... சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் - கமிஷனர் தகவல்
x

‘மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்...’ சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறினார்.

சென்னை

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக சிக்னல்கள், முக்கிய சந்திப்புகளில் இரவு நேரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 'பிரித் அனலைசர்' எனப்படும் மதுபோதையை கண்டறியும் கருவி மூலம் சந்தேகத்துக்குரிய வாகன ஓட்டிகளிடம் பரிசோதனை செய்கின்றனர். இதில் குடிபோதையில் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில் போக்குவரத்து போலீசார் குறைந்த அளவில் இப்பணியில் ஈடுபடுவதால், போதை ஆசாமிகள் தப்பிச் செல்லும் நிலை இருக்கிறது. இந்த நிலையில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்கும் பணியில் இரவு நேர ரோந்து போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இரவு நேரத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகளை பிடிப்பதில் நிறைய பிரச்சினை வருகிறது. எனவே 'பிரித் அனலைசர்' கருவி, அபராதம் விதிக்கும் 'இ-சலான்' எந்திரங்களை இன்னும் கூடுதலாக வாங்க இருக்கிறோம். இரவு நேரத்தில் போக்குவரத்து போலீசார் குறைந்த அளவில் இருப்பதால், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கும் இந்த கருவியை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story