சென்னையில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் அதிரடி கைது


சென்னையில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் அதிரடி கைது
x

சென்னையில் மெபட்ரான் என்ற பயங்கர போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

ரகசிய தகவல்

சென்னை பரங்கிமலை போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அசோக்நகர், 100 அடி சாலை, 4-வது அவென்யூ பகுதியில் 2 பேர் பயங்கர போதைப்பொருளை கடத்தி வருவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மேற்குறிப்பிட்ட பகுதியில் மாறு வேடத்தில் கண்காணித்தனர்.

அப்போது 2 பேர் அங்கு நீண்ட நேரம் கையில் பை ஒன்றை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த பைக்குள் உள்ள டப்பா ஒன்றில் 250 கிராம் எடையில் வெள்ளை நிறத்தில் பவுடர் போன்ற பொருள் இருந்தது. அது போதைப்பொருள் என்றும், அது பற்றிய விவரம் தங்களுக்கு தெரியாது என்றும், நபர் ஒருவர் அங்கு வருவார், அவரிடம் அதை கொடுக்கச்சொல்லி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது, என்றும் அவர்கள் இருவரும் கூறினார்கள். மேலும் விசாரணையில் அந்த வெள்ளை நிற பவுடர் பயங்கரமான போதைப்பொருள் என்றும் விசாரணையில் கண்டறிப்பட்டது.

மெபட்ரான் போதைப்பொருள்

பிடிபட்ட அவர்களில் ஒருவர் பெயர் விக்னேஷ் (வயது 21). திருவள்ளூர் மாவட்டம், மெய்யூரைச் சேர்ந்தவர். இன்னொருவர் கார்த்திக் (35). சென்னை, கொடுங்கையூர் ஐஸ்வர்யா நகரில் வசிப்பவர். அவர்களிடம் கைப்பற்றிய போதைப்பொருள் பற்றிய தன்மையை அறிய, மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதை ஆய்வு செய்து பார்த்தனர். பின்னர் அந்த போதைப்பொருளின் பெயர் மெபட்ரான் என்றும், மராட்டியம், கோவா போன்ற மாநிலங்களில் இந்த போதைப்பொருள் பிரபலமானது என்றும், சென்னையில் முதன் முதலாக இந்த மெபட்ரான் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்தனர். இந்த போதைப்பொருளை சுருக்கமாக எம்.டி.என்று அழைப்பார்களாம்.

இதை பயன்படுத்துபவர்கள் எம்.டி.என்றுதான் கேட்பார்களாம். இது அதிக விலை உள்ளது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 250 கிராம் மெபட்ரான் ரூ.5 லட்சம் மதிப்புள்ளது. இந்த போதைப்பொருள் ரசாயனப்பொருட்கள் மூலம் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. அதிக போதை தரக்கூடியது. இதை தொடர்ந்து பயன்படுத்தினால் உயிருக்கு உலை வைக்கக்கூடியது என்றும் சொல்லப்படுகிறது. சென்னையில் முதன் முதலாக கைப்பற்றப்பட்டுள்ள மெபட்ரான் போதைப்பொருளை இங்கு கடத்தி வந்தது யார், யாருக்கு சப்ளை செய்ய கொண்டுவரப்பட்டது, என்பது பற்றி விசாரணை நடத்த, மத்திய போதைப்பொருள் தென்மண்டல இயக்குனர் அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த போதைப்பொருளை கடத்தி வந்த விக்னேஷ், கார்த்திக் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Next Story