போதைப்பொருள் கடத்தல் வழக்கு: வி.சி.க.வில் இருந்து முகமது சலீம் நீக்கம்


போதைப்பொருள் கடத்தல் வழக்கு: வி.சி.க.வில் இருந்து முகமது சலீம் நீக்கம்
x
தினத்தந்தி 5 March 2024 5:00 AM GMT (Updated: 5 March 2024 5:15 AM GMT)

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

டெல்லி போலீஸ் துறை, மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதில் 'மெத்தம்பெட்டமைன்' எனப்படும் போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தும் 50 கிலோ எடையிலான போதையூட்டும் வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அந்த கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ போதையூட்டும் வேதிப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது.

கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தகவல் வெளியானது. இதையடுத்து அவர், தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாவட்டம், மையசென்னை மண்டல துணைச் செயலாளர் அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்படுகிறார். இவருடன் யாரும் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story