சட்டப்பேரவையில் அருகருகே எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
சட்டப்பேரவையில் அருகருகே எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து உள்ளனர்.
சென்னை
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. காலை 10 மணிக்கு அவை கூடியது கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற தொடங்கினார். அப்போது திமுக கூட்டணி கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர். அவரை பேசவிடாமல் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பினர்.
இருப்பினும் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். பின்னர் காங்கிரஸ், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இதற்கிடையில் வணக்கம் என்று கூறி தமிழில் உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி. அதுமட்டுமின்றி உரையில் இருந்த "தமிழ்நாடு" என்ற வார்த்தையை அவ்வாறே வாசித்தது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்றிருப்பதே சரி என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள், சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்தன. இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரை கவனம் பெற்றுள்ளது.
அதிமுக பிளவுபட்டு கிடக்கும் சூழலில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறித்து புதிதாக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என்று கடந்த கூட்டத்தொடரின் போதே சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் இருக்கையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் அருகருகே அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து உள்ளனர்.