'எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து


எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து
x

சென்னையில் நடந்த ஏழை ஜோடிகள் திருமண விழாவில், “எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல சுயமரியாதையை விட்டுக்கொடுத்து வாழக்கூடாது'' என மணமக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நூதன வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. கனிமொழி தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.41 லட்சம், எழும்பூர் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.3 கோடி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின்கீழ் ரூ.2.6 கோடியில் சென்னை கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் அறிஞர் அண்ணா மாளிகை கட்டப்பட்டு வந்தது.

இந்த அண்ணா மாளிகை கட்டிடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 9 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

இதுபோன்ற திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி பேசும்போது, மணமக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை, 'கருணாநிதியும், தமிழும் போல...', 'மு.க.ஸ்டாலினும், உழைப்பும் போல...' என்று வாழ்த்துவார்கள். நான் மணமக்கள் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பெண்கள் யாரும் இதை தவறாக நினைக்கக்கூடாது. பெண்களிடம் அரசியல் பேசாமல் போகவே முடியாது.

தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்று அனைவருக்குமே நன்றாக தெரியும். எனவே எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் போல வாழக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து விடாதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை கேட்டு பெற்றிடுங்கள். நான் சட்டசபையில் கூட பேசியிருந்தேன். ''எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஓ.பன்னீர்செல்வம் அவர்களே... நீங்கள் தவறுதலாக எனது காரில் ஏறிவிட்டீர்கள். எங்கள் காரை தாராளமாக எடுத்து செல்லுங்கள்.

நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் கமலாலயம் மட்டும் செல்லவேண்டாம்'', என்று பேசினேன்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, 'எந்த காலத்திலும் எங்கள் கார் அங்கே போகாது', என்றார். ஆனால் 2 பேரும் கமலாலயத்துக்கு போட்டிபோட்டு சென்று 2 மணி நேரம் காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள்? இதற்கு மேல் எதுவும் பேச விரும்பவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story