'அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்' என டுவிட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி


அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் என டுவிட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி
x

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது, ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், சி.ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண் உள்ளிட்டோரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், வைரமுத்து தரப்பில் வக்கீல் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என்றும் சென்னை ஐகோர்ட் தீரப்பளித்துள்ளது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.

இந்நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் முகப்பு பக்கத்தில் மீண்டும் 'அதிமுக இடைக்கால பொதுசெயலாளர்' என பதிவிட்டுள்ளார்.


Next Story