பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் : மு.க ஸ்டாலின்


பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக எடப்பாடி பழனிசாமி கபட நாடகம் : மு.க ஸ்டாலின்
x

பா.ஜனதாவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டுத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

மதுரையில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து, தி.மு.க.தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குகள் திரட்டினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டிற்கு வந்தால், "வணக்கம்! எனக்கு இட்லியும், பொங்கலும் பிடிக்கும். தமிழ் பிடிக்கும். திருக்குறள் பிடிக்கும். ஓட்டு போடுங்கள்" என்று கேட்கும் பிரதமரை, நாங்கள் கேட்கிறோம். தமிழ் பிடிக்கும் எனச் சொல்லிவிட்டு, தமிழ் வளர்ச்சிக்கு ரூ.74 கோடியும், சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி ஏன் என்று கேட்கிறோம்.

தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது. தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை விட்டு விதண்டாவாதம் பேச வைக்கிறார். தமிழின் சிறப்புகளைச் சொன்ன, கால்டுவெல்லையும் ஜி.யு.போப்பையும் கவர்னரை வைத்து இழிவுபடுத்துகிறார்கள். அதையாவது கண்டித்தீர்களா? திருவள்ளுவருக்கு ஏன் காவிச்சாயம் பூசுகிறீர்கள் எனக் கேட்கிறோம். இப்படி அத்தனை தமிழ் விரோத வேலையும் செய்துவிட்டு, தயவுசெய்து வாயால் வடை மட்டும் சுடாதீர்கள் என்று கேட்கிறோம்.

இப்படி தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழினத்திற்கும் விரோதமாக இருக்கும் பா.ஜனதாவுக்கு பாதம்தாங்கியாக இருந்து, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அத்தனை துரோகங்களுக்கும் துணையாக இருந்தவர் பழனிசாமி. பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே, எங்கேயாவது பா.ஜனதாவையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை மறந்தாவது பேசுகிறாரா?

பா.ஜனதாவுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டு எதிரிகளுக்கு அளிக்கும் வாக்கு. அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு, தமிழ்நாட்டுத் துரோகிகளுக்கு அளிக்கும் வாக்கு. எனவே, தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜனதா தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. ஆகிய தமிழர் விரோதிகளை ஒருசேர வீழ்த்துங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


Next Story