இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7ம் நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரால் இஸ்ரேலில் பல இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன்படி, இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் மீட்பு விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது.

இதன் பின்னர், டெல்லியிலிருந்து சென்னை வந்த 14 பேரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களில் தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்யப்பட்டவர்களில் 21 பேர் சிறப்பு விமானம் மூலம் புதுடெல்லி வந்தடைந்தனர். புதுடெல்லி விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வரவேற்பு மையம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், தமிழக அரசு செலவில் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 14 பேர் தற்போது சென்னை விமானநிலையம் வந்துள்ளனர். 7 பேர் கோவை விமான நிலையம் வந்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள 114 தமிழர்களையும் பத்திரமாக மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story