மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x

ஆவடி அருகே புதிய வீடு கட்டுவதற்கு மின் இணைப்பு வழங்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை

ஆவடி அடுத்த கோவில்பதாகை திருமுல்லைவாயில் சாலையில் வசிப்பவர் இத்ரிஸ் (வயது 42). கார் டிரைவர். இவர் கோவில்பதாகை பகுதியில் சொந்தமாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு செய்தார்.

அதைத்தொடர்ந்து அவரது மனு பரிசீலனை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த பாளையம் (வயது 50) என்பவரிடம் சென்று அனுமதியளிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.9 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் மின் இணைப்பு வழங்க பரிந்துரை செய்வேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து லஞ்சம் கொடுக்க மனமில்லாத இத்ரிஸ், கடந்த 6-ந்தேதி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, சுமத்ரா ஆகியோர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை கோவில்பதாகை பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு வந்தனர்.

அதன் பின்னர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை இத்ரிஸிடம் கொடுத்து அனுப்பினர். அப்போது அலுவலகத்தில் மின்வாரிய அதிகாரி பாளையத்திடம் இத்ரீஸ் பணத்தை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பாளையத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

1 More update

Next Story