மின்சார ரெயில்கள் ரத்து: மெட்ரோ ரெயில் சேவை இன்று கூடுதலாக இயக்கம்
இன்று காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து இன்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "தெற்கு ரெயில்வேயில் சென்ட்ரல் மற்றும் தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று மெட்ரோ ரெயில்களில் அதிக பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு இடமளிக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நீலம் மற்றும் பச்சை வழித்தடம் இரண்டிலும் வழக்கமாக மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இயக்கப்படும் ரெயில் சேவைக்குப் பதிலாக காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும் வழக்கமான ஞாயிறு கால அட்டவணையின்படி, காலை 05:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், இரவு 08:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மேற்கண்ட அட்டவணை மாற்றம் 25-02-2024-க்கு மட்டுமே பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.