மனைவி, குழந்தைகளை கொன்று என்ஜினீயர் தற்கொலை: மாத, வார வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா? போலீஸ் விசாரணை


மனைவி, குழந்தைகளை கொன்று என்ஜினீயர் தற்கொலை: மாத, வார வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா? போலீஸ் விசாரணை
x

மனைவி, குழந்தைகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு என்ஜினீயர் தற்கொலை செய்த வழக்கில் மாத, வார வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஸ்வரா நகர், இஷ்டசக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). என்ஜினீயரான இவர், தன்னுடைய மனைவி காயத்ரி (39), மகள் நித்யஸ்ரீ (13), மகன் ரித்திஷ் (8) ஆகியோரை மரம் அறுக்கும் ரம்பத்தால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, அதே ரம்பத்தால் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர கொலை, தற்கொலை சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயத்ரி, வீட்டின் அருகே உள்ள வடிவேல் தெருவில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்தார். கடை நடத்துவதற்காக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கியது, வீட்டுக்கடன், கார் கடன் என ரூ.87 லட்சத்துக்கும் அதிகமாக கடன் சுமை இருந்ததால் விரக்தி அடைந்த பிரகாஷ், தனது குடும்பத்தினரை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

"எங்கள் சாவுக்கு யாரும் பொறுப்பல்ல. இது நானும், எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு" என பிரகாஷ் ஆங்கிலத்தில் எழுதிய 2 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். ஒரு கடிதம் சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது. மற்றொரு கடிதம் நோட்டில் இருந்தது. அதில் உள்ள கையெழுத்து பிரகாஷ் உடையது தானா? என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோல கொலை செய்வதற்கு முன்பு மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் தெரியவரும். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

எனவே தடயவியல் நிபுணர்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அந்த அறிக்கைகள் வந்த பிறகுதான் வழக்கின் விசாரணை அடுத்தகட்டத்துக்கு நகரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று அதிகாலை 2.50 மணிக்கு பிரகாஷ் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு 'வாட்ஸ்அப்'பில், 'நாளை வீட்டுக்கு வா' என குறுந்தகவல் அனுப்பி உள்ளார். பதிலுக்கு அவரது நண்பர், 'என்ன விஷயம்?' என்று கேட்க, அதற்கு இவர், 'நாளைக்கு நேரில் வா' என தகவல் அனுப்பி, அதன்பிறகு 'தம்ஸ் அப்' குறியீடு போட்டு அந்த உரையாடல் முடிகிறது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சம்பவம் இரவு 11 மணி அளவில் நடந்து இருக்கலாம் என தெரிவித்தனர். ஆனால் அவர் நண்பருக்கு அதிகாலை 2.50 மணிக்குதான் தகவல் அனுப்பி உள்ளார். எனவே இந்த கொலை மற்றும் தற்கொலை அதிகாலையில் நடந்து இருக்கலாம் என போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதே நேரத்தில் மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு அதன்பிறகு அதிகாலையில் நண்பருக்கு தகவல் அனுப்பி விட்டு அவர் தற்கொலை செசய்து கொண்டாரா? எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

காயத்ரி, மாத வட்டி மட்டும் இன்றி தின வட்டி, வார வட்டி என பலரிடம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள், அடிக்கடி அவரது கடைக்கு வந்து கடன் கேட்டு வந்ததாகவும் தெரிகிறது. எனவே அவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து உள்ளனர்.

மேலும் அவர்களில் யாராவது காயத்ரியை மிரட்டினார்களா? என அவரது செல்போனில் பேசியவர்களின் உரையாடல்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடைக்கு தினமும் எத்தனை பைனான்சியர்கள் வருவார்கள்? அதில் யாராவது பணம் தராததால் காயத்ரியை மிரட்டினார்களா? என கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடன் கொடுத்தவர்கள் மிரட்டியதாக அவரது உறவினர்கள் யாரும் இதுவரை யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை.

அதேபோல் கடை சாவியை பெண் ஊழியரிடம் வைத்துக்கொள்ள சொன்ன பிரகாஷ், வேலைக்காக தான் பயன்படுத்திய ஒரு லேப்டாப்பை அலுவலகத்தில் கொடுக்க சொல்லியும் அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அங்கு உள்ள மருந்து கடையில் அவர் மருந்து வாங்கி சென்றதை பார்த்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த கொடூர கொலை மற்றும் தற்கொலை சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பல கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story