ஈபிஎஸ் அரசியல் பயணம்... ஓபிஎஸ் ஆன்மிக பயணம்... வெற்றி யாருக்கு? அதிமுகவில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாரணாசி புறப்பட்டு சென்றார்.
சென்னை:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அ.தி.மு.க. அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது தொடர்பான கோர்ட்டு தீர்ப்பு மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்ற கோர்ட்டு தீர்ப்பையும் எடுத்துக்கூறி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாக முறையிட்டு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் மதுரை மற்றும் ராமேசுவரம் சென்றார். அங்குள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரையில் இருந்து சென்னை வந்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் தங்கி இருந்தார்.
பின்னர் பயணிகள் விமானத்தில் அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து வாரணாசி புறப்பட்டு சென்றார். அங்கு காசி விஸ்வநாதா் கோவில் உள்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மீண்டும் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.