கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும் - வானதி சீனிவாசன்
கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை,
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்துதான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.
மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கண்டிப்பாக அமல்படுத்தப்படும். தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். கிராமப்புறங்கள் மேம்படும் வகையில்தான் பிரதமர் மோடியின் ஒவ்வொரு திட்டங்களும் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.