கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்


கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
x
தினத்தந்தி 7 May 2024 6:20 AM GMT (Updated: 7 May 2024 6:26 AM GMT)

பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிநயா (வயது 17). இவர் பேர்பெரியான்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதையடுத்து இவர் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினார்.

இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் அபிநயா ஆர்வத்துடன் தேர்வு முடிவை பார்த்தார். இதில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் மனமுடைந்து காணப்பட்டார். கணித பாடத்தில் 100-க்கு 26 மதிப்பெண் பெற்றிருந்தார். இது தவிர தமிழ்-85, ஆங்கிலம்-41, இயற்பியல்-54, வேதியியல்-72, கணினி அறிவியல்-82 என மொத்தம் 600-க்கு 360 மதிப்பெண்கள் பெற்று இருந்தார்.

இதையடுத்து அவரது தந்தை வெளியில் சென்றிருந்தார். தாய் செந்தாமரை முந்திரி தோப்பில் வேலை செய்து கொண்டிருந்தார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அபிநயா வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு வந்த பெற்றோர் அபிநயா தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊ.மங்கலம் போலீசார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்த விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story