கொடுங்கையூரில் மகனை கத்தியால் குத்திய தந்தை - வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊரை சுற்றியதால் ஆத்திரம்


கொடுங்கையூரில் மகனை கத்தியால் குத்திய தந்தை - வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊரை சுற்றியதால் ஆத்திரம்
x

வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு ஊரைச் சுற்றிய மகனை கத்தியால் சரமாரியாக குத்திய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை கொடுங்கையூர் எழில்நகர் ஏ.பிளாக்கில் வசித்து வருபவர் உதயகுமார் (வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மகன் விக்னேஷ் (23). இவர், கோயம்பேட்டில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.

விக்னேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊரை சுற்றி வந்தார். வேலைக்கு செல்லாமல் இப்படி குடித்துவிட்டு ஊர் சுற்றுகிறாயே? என மகனை உதயகுமார் கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாக தந்தை-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த உதயகுமார், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து மகன் விக்னேசை சரமாரியாக குத்தினார். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த விக்னேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள உதயகுமாரை தேடி வருகின்றனர்.


Next Story