காவிரி தண்ணீரை திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் - ராமதாஸ்


காவிரி தண்ணீரை திறக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள் - ராமதாஸ்
x

காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 22-ம் நாள் வரை 33.31 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி.க்கும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது.

இன்று வரை சுமார் 30 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு பாக்கி வைத்திருக்கிறது. கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டி.எம்.சி.க்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது.

20-ந் தேதி நிலவரப்படி கர்நாடக அணைகளுக்கு வினாடிக்கு 12,000 கன அடி மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 27,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்தியளிக்கும் நிலையில் இருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வரவில்லை. கர்நாடக அணைகளில் மிகக்குறைந்த அளவிலேயே தண்ணீர் உள்ளது.

அதனால், கர்நாடகத்தின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என்பதைத் தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வரவில்லை; மத்திய அரசிடம் முறையிட்டும், அதனால் பயன் இல்லை.

இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தயாராக இல்லை. இத்தகைய சூழலில், காவிரி நீர் பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதை தமிழக அரசு ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் இத்தகைய சூழலில் உச்சநீதி மன்றத்தை அணுகியே தமிழகம் தனக்கான நீதியை வென்றெடுத்துள்ளது. அதேபோல், இப்போதும் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்றுவதற்காக கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story