பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்


பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
x

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்; 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல. உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் வழங்கப்படுவதுடன், தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையான உடல் நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. உடனடியாக அனைத்து பட்டாசு ஆலைகளிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு பட்டாசு ஆலைகள் மற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.



Next Story