பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கோப்புப்படம்

விருதுநகர் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

விருதுநகர் சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், பூத்தோட்டி எனப்படும் பட்டாசுகளை தயாரிக்கும் பணி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 2 ஆண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 தொழிலாளர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆணையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மம்சாபுரம், இடையன்குளத்தைச் சேர்ந்த திரு. தங்கவேலு த/ப.வெள்ளைச்சாமி (வயது 65) மற்றும் திரு. கருப்பசாமி, த/பெ.பிச்சை (வயது 28) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமமைனயில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. கருப்பம்மாள், க/பெ.வடக்கத்தியான் என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அவரது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story