மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு


மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: இந்திய கடற்படை வீரர்கள் மீது வழக்குப்பதிவு
x

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

காரைக்கால் பகுதியில் இருந்து கடந்த 15-ந் தேதி செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் குறிப்பிட்ட நாட்கள் படகிலேயே தங்கி இருந்து ஆழ் கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் கோடியக்கரை அருகே நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். பங்காரா என்ற கப்பல் ரோந்து வந்தது.

10 மீனவர்கள் இருந்த மீன்பிடி படகு மீது இந்திய கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர். அந்நேரம் நடுக்கடலில் மழை பெய்து கொண்டிருந்ததால் கடற்படையினரின் எச்சரிக்கையை கவனிக்காமல் மீனவர்களின் படகு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த இந்திய கடற்படையினர், கப்பலில் இருந்தபடியே மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் படகில் இருந்த மீனவர் வீரவேல் (வயது 32) மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் படகிலேயே சுருண்டு விழுந்தார்.

விபரீதம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த படகின் அருகில் வந்து பார்த்த இந்திய கடற்படையினர், நிலைமையை உணர்ந்து முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவசர நிலையை உணர்ந்து உச்சிப்புளியில் இருந்து கடற்படை ஹெலி காப்டர் விரைந்து சென்றது. நடுக்கடலில் படகில் உயிருக்கு போராடிய வீரவேலை உடனடியாக மீட்டு ஹெலிகாப்டரில் ஏற்றி உச்சிப்புளி கடற்படை விமான தளத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு மீண்டும் முதல் உதவி அளித்து, தயார் நிலையில் நிறுத்தி இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மீனவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வீரவேலின் உடலில் 2 இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை ஆகியோர் பாதிக்கப்பட்ட மீனவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி விசாரித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வீரவேல் கொண்டு வரப்பட்டார். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவரை துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மரைன் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனபடி கொலைமுயற்சி பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story