சென்னை விமான நிலையத்தில் எந்திர கோளாறால் பிரான்ஸ் விமானம் ரத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் செல்ல இருந்த விமானம் எந்திர கோளாறால் ரத்து செய்யப்பட்டது. இதனால் 276 பயணிகள் உயிர் தப்பினர்.
மீனம்பாக்கம்,
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரீஸ் நகருக்கு ஏர் பிரான்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. 276 பயணிகள் அந்த விமானத்தில் செல்வதற்காக சோதனைகளை முடித்துவிட்டு தயாராக இருந்தனர்.
விமானத்தை இயக்குவதற்கு முன்பு எந்திரங்களை விமானி சரி பார்த்தார். அப்போது விமானத்தில் ஏ.சி.க்கு தேவையான ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதை கண்டறிந்தார். இதே நிலையில் விமானத்தை இயக்கினால் பெரும் ஆபத்து என்பதால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
ரத்து செய்யப்பட்டது
இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான என்ஜினீயர்கள் குழுவினர், ஆக்சிஜன் அளவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக சரி செய்யமுடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சென்னையில் இருந்து பாரீஸ் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாரீஸ் செல்ல வேண்டிய 276 பயணிகளும் சென்னை நகரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
உயிர் தப்பினர்
இவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். புத்தாண்டை கொண்டாடுவதற்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்தவர்கள். விமானம் ரத்தால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாமல் சென்னையில் தவித்தனர்.
விமானத்தில் ஆக்சிஜன் அளவு குறைவை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 276 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.