திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது


திருவொற்றியூரில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி; சங்க தலைவர் கைது
x

வீடு வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க தலைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

வீடு வாங்கி தருவதாக...

சென்னை எர்ணாவூர், கண்ணிலால் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 43). இவர், சென்னை நண்பர்கள் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் தலைவர் ஆவார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள சங்கீதா உள்பட 150 மாற்றுத்திறனாளிகளிடம் அரசு ஒதுக்கும் வீடுகளை வாங்கி தருவதாக ஆனந்தகுமார் கூறினார். மேலும் இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.20 ஆயிரம் என ரூ.12 லட்சத்து 96 ஆயிரத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.

போலி ஆவணம்

அதன்பிறகு பணம் கொடுத்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோல் போலியான ஆணைகளை தயாரித்து அவர்களிடம் கொடுத்து ஏமாற்றினார். இந்த உண்மை தெரிந்ததும், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மாற்றுத்திறனாளிகள், தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டனர்.

ஆனால் ஆனந்தகுமார், பணத்தை திருப்பி கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், இந்த மோசடி தொடர்பாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சங்கத்தலைவர் கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். அதில் வீடு வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளிகளிடம் ரூ.13 லட்சம் ேமாசடி செய்யப்பட்டது உறுதியானது.

இதையடுத்து சென்னை நண்பர்கள் மாற்றுத்திறனாளி நலச்சங்கத்தின் தலைவரான ஆனந்தகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சங்க பொதுச்செயலாளர் சாராபானுவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story