இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி: போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலையா?


இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி: போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலையா?
x

இளம்பெண்ணை காதலித்து ரூ.68 லட்சம் மோசடி செய்ததாக போலீசாரால் தேடப்பட்ட வாலிபர், போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(வயது 29). இவருக்கும், சென்னையை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கும் பள்ளியில் படிக்கும்போதே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இந்தநிலையில் நிஷாந்த், திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்தார். மேலும் இளம்பெண்ணின் பூர்வீக சொத்தை விற்று கிடைத்த ரூ.68 லட்சத்தை வாங்கினார். ஆனால் அதன்பிறகு பணத்தையும் திருப்பி கொடுக்காமல், இளம்பெண்ணையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

இதற்கிடையில் நிஷாந்துக்கு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மகளுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுபற்றி மதுரவாயல் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

இதையறிந்த தொழில்அதிபர், நிஷாந்துடன் தனது மகளுக்கு நடக்க இருந்த திருமணத்ைத நிறுத்திவிட்டார். இளம்பெண் அளித்த புகாரின்பேரில் நிஷாந்த் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் தலைமறைவான நிஷாந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து நிஷாந்த் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் தனது நண்பரின் காரை வாங்கிக்கொண்டு சென்ற நிஷாந்த், சிறிது நேரத்தில் தனது நண்பர்களுக்கு 'வாட்ஸ்அப்'பில் குறுந்தகவல் அனுப்பினார்.

அதில் அவர், தான் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், போரூர் ஏரிக்கு சென்று பார்த்தனர்.

போரூர் மேம்பாலத்தில் நிஷாந்த் ஓட்டிச்சென்ற கார் மட்டும் தனியாக நின்றது. அவரை காணவில்லை. அவரது செல்போனும் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதுபற்றி போரூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், சென்னை மெரினா கடற்கரை நீச்சல் பயிற்சி வீரர்கள் ஆகியோர் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் ரப்பர் படகுகளை பயன்படுத்தி ஏரியில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படும் நிஷாந்தை தேடி வருகின்றனர்.

உண்மையிலேயே நிஷாந்த் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதால் கைது நடவடிக்கைக்கு பயந்து தற்கொலை நாடகம் ஆடிவிட்டு வேறு எங்காவது தப்பி ஓடிவிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story