இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி


இரட்டை கொலையில் தப்பி ஓடி தலைமறைவு: 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் பிடிபட்ட கொலையாளி
x

புதுவண்ணாரப்பேட்டையில் இரட்டை கொலை செய்து விட்டு தலைமறைவான கொலைகுற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆந்திராவில் சிக்கினார்.

சென்னை

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த மாரி என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மகேஷ் குமார் (7) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் கணவர் மாரி இறந்துவிடவே குணசுந்தரி கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த கொத்தனார் ராஜ் (40) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் ராஜின் கொடுமை தாங்காமல் கோபித்து கொண்டு குணசுந்தரி புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள தனது தாய் நாகவள்ளி வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில், குணசுந்தரியை பார்ப்பதற்கு மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்த ராஜ், மனைவி நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குணசுந்தரி அவரது மகன் மகேஷ்குமார் ஆகிய 2 பேரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொலையாளியை 8 ஆண்டுகளாக தேடிவந்தனர். இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளியை பிடிக்க வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யபாரதி வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுந்தர வதனத்திற்கு உத்தரவிட்டார். ஒரு வார காலத்திற்குள் குற்றவாளியை பிடித்து தருவதாக அவர் உறுதியளித்தார்.

பின்னர் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் நசீர் முகமது மேற்பார்வையில், சப் - இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, நரசிம்மன், சிவகுமார், விஜயகுமார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ஆபரேஷன்-டி என்ற வாட்ஸ்-அப் குழுவை அமைத்து குற்றவாளி தொடர்பாக தனிப்படை போலீசார் ஆந்திராவில் 4 நாட்களாக முகாமிட்டு தேடி வந்தனர்.

அப்போது குற்றவாளி புகைப்படத்தை ஆந்திர மாநில போலீசார் வாட்ஸ்-அப் குரூப்புகளில் அனுப்பி வைத்து குற்றவாளி பற்றி தகவல் தெரிந்தால் தங்கள் செல்போன் எண்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். பின்னர் அந்தப் புகைப்படம் மற்ற வாட்ஸ்-அப் குழுவிற்கு பகிரப்பட்டு வந்தது. பின்னர் குற்றவாளியின் இருக்குமிடத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபுவிடம் தகவல் தெரிவித்துள்ளார் கொலையாளி, தனது வீட்டிற்கு கொத்தனார் வேலை செய்து வந்ததாகவும், அவர் ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு தினமும் இரவு 7 மணிக்கு மேல் வருவதாகவும் போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் மறைந்திருந்து கொலையாளி ராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த ராஜ் தற்போது போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஆந்திராவில் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story