இன்று மாலைக்குள் முழுமையாக மின்விநியோகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு


இன்று மாலைக்குள் முழுமையாக மின்விநியோகம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 5 Dec 2023 5:30 AM GMT (Updated: 5 Dec 2023 6:32 AM GMT)

தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழிலகத்தில் நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தண்ணீர் வடியாத இடங்களில் மட்டும் மக்கள் நலன்கருதி மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் உயிர்சேதம் ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்காத பகுதிகளில் மின் விநியோகத்தை முழுமையாக வழங்க முயற்சி செய்து வருகிறோம். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் ஆபத்தை கருத்தில் கொண்டு நிதானமாக பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களும் சூழலைப் புரிந்துகொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மின் நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6,703 மின்வாரிய பணியாளர்கள், 393 பொறியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூரில் மின் சேவையை சரி செய்ய 1,050 பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும். மழைநீர் தேங்காத பகுதியில் பிற்பகலுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பல பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று 120 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில் இன்று 400 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story