100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை


100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரம்: 3-வது மாடியில் இருந்து தள்ளி கட்டிட தொழிலாளி கொலை
x

100 ரூபாய் கூடுதலாக கூலி வாங்கியதால் ஆத்திரத்தில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கட்டிட தொழிலாளியை கொன்றுவிட்டு, குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடிய அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடக்கிறது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த ஆனந்தன் (வயது 22) மற்றும் அவரது நண்பர்களான சக்திவேல் (25), பிரசாந்த் (23), சீனிவாசன் (25) ஆகியோர் அங்கேயே தங்கி இருந்து பணியாற்றி வந்தனர்.இந்த நிலையில் அந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து ஆனந்தன் கீழே தவறி விழுந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் ஆனந்தன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி ஆனந்தனின் நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போது ஆனந்தன், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறினர்.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார், துருவி துருவி விசாரித்தபோதும் எந்தவித பதற்றமும் இல்லாமல் பொறுமையாக இருந்தனர். இதையடுத்து ஆனந்தனுடன் ஒன்றாக மது அருந்திய சக்திவேல், சீனிவாசன், பிரசாந்த் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.அதில் சீனிவாசனை தவிர்த்து மற்ற 2 பேரும் ஆனந்தனுடன் ஒரே இடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தனர். ஆனால் ஆனந்தன் மட்டும் நன்றாக வேலை செய்வதால் அவருக்கு மேஸ்திரி 100 ரூபாய் கூடுதலாக கூலி கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் இருவரும், ஆனந்தனிடம், "நீயும் எங்களைபோல் வேலையை பொறுமையாக செய். உன்னால் மேஸ்திரி எங்களை அவமானப்படுத்துகிறார்" என கூறி உள்ளனர். ஆனால் ஆனந்தன் அதை கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சக்திவேல், பிரசாந்த் இருவரும் சேர்ந்து ஆனந்தனை சீனிவாசன் வேலை செய்யும் வேளச்சேரியில் உள்ள மற்றொரு கட்டிடத்துக்கு அழைத்துச்சென்று ஒன்றாக மது அருந்தினர். பின்னர் மது போதையில் இருந்த ஆனந்தனை, அந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை குடிபோதையில் தவறி விழுந்ததாக நாடகமாடி ஆஸ்பத்திரியில் சேர்த்ததும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வேளச்சேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story