அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற விழாவில் 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தேர்வாணையத்தின் மூலமாக தொகுதி-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 205 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 12 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை நேரில் வழங்கினார். அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், உரியவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஒருவருக்கு வேலை கிடைத்தால் அது பல தலைமுறைக்கும் பயனளிக்கும். லட்சம் பேர் தேர்வு எழுதி லட்சத்தில் ஒருவராக தேர்வான உங்களுக்கு மக்கள் சேவை என்ற ஒன்றுதான் லட்சியமாக இருக்கவேண்டும்.

இறக்கும் முன்பு உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று நான் அறிவித்தபடி, உடல் உறுப்பு தானம் செய்து, அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்ட முதல் நபர், ஒரு அரசு ஊழியர்தான். தேனி மாவட்டம், சின்னமனூரில் மூளைச்சாவு அடைந்ததால், உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலு உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

மத்திய அரசு பணி

தமிழ்நாட்டுல் இருக்கிற பல்வேறு மத்திய அரசுத் துறைகளான ரெயில்வே, அஞ்சல் துறை, வங்கிகள் ஆகியவற்றில் இருக்கக்கூடிய காலிப் பணியிடங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டு வருகிறோம். மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் தமிழ் மொழியிலும் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.

என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று, ஸ்டாப் செலக்சன் கமிஷன் மூலமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தரத்தில், பன்முகப் பணியாளர் பதவிக்காக நடத்தப்படுகிற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று மத்திய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. நிர்ணயித்த இலக்கான பத்து லட்சத்தை தாண்டி பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசால் நடத்தப்படுகிற போட்டித் தேர்வுகளிலும் நம்முடைய மாணவர்கள் அதிகமாக தேர்வாகவேண்டும் என்று எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., வங்கிப் பணி போன்றவற்றிற்காக 5 ஆயிரம் பேருக்கு ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகளை நான் முதல்வன் திட்டத்தில் நாம் நடத்திக்கொண்டு வருகிறோம்.

ஐ.ஏ.எஸ். தேர்வு

குடிமைப்பணி தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகிற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. வரும் அக்டோபர் மாதத்திலிருந்து இது தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, மாநில அரசு பணிகள் போலவே, மத்திய அரசு பணிகளிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் தேர்வாக வேண்டும்.

50 ஆயிரம் பேருக்கு வேலை

தமிழக அரசு அமைந்த கடந்த 2 ஆண்டு காலத்தில் 12 ஆயிரத்து 576 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது 10 ஆயிரத்து 205 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசு பணிகள் வழங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசு பணிகளுக்கு 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

மக்கள் உங்களிடம் கோரிக்கையுடன் வரும்போதெல்லாம் என்னுடைய இன்னொரு முகமாக, என்னுடைய பிரதிநிதியாக, இந்த அரசின் அலுவலராக இருக்கிற நீங்கள், மக்களை எளிமையாக அணுகி, அவர்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து, அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் அவர்களிடம் சேர்த்து பயனடையச் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

ஏழையின் கண்ணீர்

ஒரு ஏழையின் கண்ணீரை உங்கள் கரங்கள் துடைத்தால் அதன் பெருமையும், ஒருத்தர் உதாசீனப்படுத்தினால் அதனால் வரும் வசவும் என்னைத்தான் சேரும். அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை அலுவலர்கள் வரை உள்ள அனைவருக்கும் நான் வைக்கும் வேண்டுகோள், உங்களிடம் கோரிக்கை மனுவுடன் வருகிறவர்களை முதலில் உட்கார வைத்து பேசுங்கள். பிரச்சினையை காது கொடுத்து கேளுங்கள். அதுவே அவர்களுக்கு மன நிறைவை தரும். அப்படி கேட்டால், அவர்களுடைய பாதி பிரச்சினை தீர்ந்து போய், பாதியளவுக்கு நிம்மதி அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story