2 நாள் பயணமாக இன்று கோவை வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி


2 நாள் பயணமாக  இன்று கோவை வருகிறார் கவர்னர் ஆர்.என்.ரவி
x

கவர்னரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாலக்காட்டில் உள்ள தனது நண்பரை சந்திப்பதற்காகவும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும் இன்று கோவைக்கு வருகிறார்.

இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 3 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலமாக, கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார். அங்கு சிறிது நேரம் தங்கி ஒய்வெடுக்கிறார்.

பின்னர் அவர் மாலை 4 மணியளவில் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலமாக பாலக்காட்டிற்கு செல்கிறார். அங்கு தனது நண்பரின் வீட்டிற்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, அவரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பானது சில மணி நேரங்கள் நடக்கிறது. நண்பரை சந்தித்து விட்டு இரவு 7 மணிக்கு பாலக்காட்டில் இருந்து மீண்டும் கார் மூலமாக கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து தங்குகிறார்.

நாளை காலை 11 மணிக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி உரையாற்றுகிறார். 2 நாள் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை 3 மணிக்கு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

கவர்னரின் வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் செல்லும் சாலைகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை பகுதி உள்பட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story