குஜராத்: பாலம் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
மோர்பி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த சூழலில் பாலத்தில் இன்று 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இதனையடுத்து மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மோர்பி பாலம் விபத்தில் சிக்கி பல அப்பாவி உயிர்கள் பலியாகியதில் ஆழ்ந்த வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் வேண்டுகிறேன். அதே வேளையில், சிக்கியுள்ள எஞ்சிய மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.