தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பொதுமக்கள் சாலை ஓரத்தில் உள்ள கடைகளில் பழச்சாறுகள், தர்பூசணி, பழ வகைகள், கரும்பு சாறு, இளநீர் போன்றவற்றை பருகி இளப்பாறி வருகின்றனர்.
சாலையில் நடந்து செல்லும் இளைஞர்கள், பெரியவர்கள் குடைப்பிடித்த படியும், பெண்கள் தலையில் துப்பட்டா மற்றும் புடவைகளை போர்த்தியபடியும் செல்கின்றனர். வருங்காலங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் காரணம் இன்றி வெளியில் நடமாடாமல் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையமும், அரசாங்கமும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, கர்நாடக உள் மாவட்டங்கள், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் நேற்று அதிக வெப்ப அலை வீசிய நகரங்களில் ஈரோடு மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் புவனேஸ்வர் நகரும், இரண்டாவது இடத்தில் கடப்பாவும் உள்ளன.