புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்


புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்
x

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. காலையில் 7 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரையில் நீடித்து வரும் நிலையில் சாலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையும் சென்னை மற்றும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம், படப்பை, புறநகர் பகுதிகளில் சாலையே தெரியாத அளவிற்கு புகைபோல் பனிமூட்டம் மூடி கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றதை காண முடிந்தது. கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலையில் ஓடுபாதை தெரியாத அளவிற்கு சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் இருந்து வந்த விமானம், காலை 8.10 மணிக்கு அடிஸ் அபாபா நகரில் இருந்து வந்த எத்தியோப்பியா விமானம், துபாயில் இருந்து காலை 8.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்க வேண்டிய விமானம் ஆகியவை ஒடுபாதை தெளிவாக தெரியாததால் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் துபாய், பெங்களூரு மற்றும் எத்தியோப்பியா விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூரூ விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

மேலும் மும்பை, பெங்களூரூ, ஐதராபாத், கொழும்பில் இருந்து வந்த 4 விமானங்களும் தரை இறங்க முடியாததால் வானிலேயே தொடர்ந்து வட்டமடித்து கொண்டு இருந்தன. காலை 8.45 மணிக்கு வானிலை சீரானதும் வானில் வட்டமடித்த 4 விமானங்களும் ஒன்றின் பின் ஒன்றாக தரை இறங்கின. திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டு சென்னையில் தாமதமாக தரை இறங்கியது.


Next Story