சென்னையை புரட்டி போட்ட கனமழை: 13 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் உத்தரவு...!


சென்னையை புரட்டி போட்ட கனமழை: 13 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் உத்தரவு...!
x

நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த 13 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளை வழங்க 13 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மழை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் மேலும் 7 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'இந்த சூழ்நிலையில், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும். கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும். மேலும் ஏழு அமைச்சர் பெருமக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.

அதன்படி. மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு. முத்துசாமி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும்;

மாண்புமிகு உணவு வழங்கல் துறை அமைச்சர் திரு, அர. சக்கரபாணி அவர்கள் தாம்பரம் மாநகராட்சிக்கும்;

மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் ஆவடி மாநகராட்சிக்கும்;

அமைச்சர் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் கத்திவாக்கம். மணலி. மாத்தூர். சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும்;

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்கள் வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும்;

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கும்;

மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.சி.வெ. கணேசன் அவர்கள் சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்கும்;

மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story