கோவையில் பெய்த கனமழை: சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் சக்கரம் சிக்கியதால் பரபரப்பு
அரசு பேருந்தின் சக்கரம் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை,
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கோவையில் நேற்று சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், கோவை மதுக்கரை மார்க்கெட் சாலை பகுதியில் அரசு பேருந்து ஒன்றின் சக்கரம் சாலையில் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து துறையினர் கிரேன் மூலம் பேருந்தை மீட்டனர். அண்மையில் அந்த பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளதாகவும், இந்த சூழலில் நேற்று பெய்த மழை காரணமாக பேருந்தின் சக்கரம் சாலையில் புதைந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.