இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ்நாட்டில் இருந்தே எழுதப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நூல் வெளியீட்டு விழா

ஒடிசா மாநில முதல்-மந்திரியின் முதன்மை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம் - சிந்து முதல் வைகை வரை' நூல் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது.

விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, கலாநிதி வீராசாமி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன், இந்து குழும தலைவர் என்.ராம், ஒடிசா திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் சுப்ரதோ பாக்சி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நூலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழுக்கு உள்ள தகுதி

சங்க இலக்கியங்களில் தமிழர் தம் பெருமையை திராவிட இயக்கத்தவர்கள் மேடையில் முழங்கியபோது, இதெல்லாம் இலக்கியம்தானே... வரலாறு கிடையாதே என்று சிலர் அதனை நிராகரித்தார்கள். அந்த சொல்லியல் ஆதாரங்கள் அனைத்துக்கும் இப்போது தொல்லியல் ஆதாரம் கிடைத்துவிட்டது.

சிந்து பண்பாடு என்பது 5,000 ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ். அங்கு வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்கள். சிந்து பரப்பில் திராவிடக் கருதுகோள்தான் முதன்மையானது. சிந்து பண்பாடு பரவியிருந்த இடங்கள் என்பது குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகள். இந்த பகுதிகளில் எத்தனை தமிழ்ச் சொற்கள் இப்போதும் வழங்கப்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இவரது ஆய்வு.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான பெயர்கள், இந்திய துணைக்கண்டம் முழுமைக்கும் இருக்கிறது என்பதை இடப்பெயராய்வு முறை மூலமாக அவர் நிரூபிக்கிறார். மொகஞ்சதாரோவில் இருந்த திமில் கொண்ட காளைதான், அலங்காநல்லூரில் துள்ளிக்குதிக்கிறது. எனவே சிந்துவெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு என்பது இவரது ஆய்வினுடைய முடிவு.

கருப்பு-சிவப்பு வண்ணம்

இந்த புத்தகத்தில் எனது மனம் கவர்ந்த பகுதி 'திராவிடச் சிவப்பு' என்ற பகுதி. சிந்து வெளிப்பண்பாட்டின் நிறக்குறியீடு என்பது கருப்பு, சிவப்பாக இருப்பது எனக்கு மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் என்று நான் நம்புகிறேன்.

'கருப்பும் சிவப்பும் வெகுளிப்பொருள்' - என்று தொல்காப்பியம் சொல்கிறது. சிந்துவெளிப் பண்பாட்டில் சுட்ட செங்கற்கள், செம்பு, மட்பாண்டம் ஆகியவை சிவப்பாக உள்ளன. கருப்பையும், சிவப்பையும் நிறமாக மட்டுமல்ல, பண்புப் பெயர்களாகவும் சொல்கிறார். குருதி, வலிமை, வீரம், சினம், வெற்றி, உன்னதம், ஒழுங்கு ஆகிய பண்புகளை கருப்பு, சிவப்பு வண்ணங்கள் அடையாளப்படுத்துகிறது. இதே கருப்பு சிவப்பு வண்ணம்தான் கீழடியில் கிடைத்த பொருட்களிலும் காணப்படுகிறது. அதனால்தான் அதனை ஏற்பதற்கு சிலருக்கு மனம் வரமாட்டேன் என்கிறது. நம்முடைய அண்மைக்கால ஆய்வுகள் தமிழரின் பழம் பெருமையை மீட்பதாக அமைந்துள்ளன. சங்ககால வாழ்வியல், நகர்மய வாழ்வியல் என்பது கற்பனையானது அல்ல. அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் உள்ளன என்பதை திராவிட மாடல் அரசானது மெய்ப்பித்து வருகிறது.

திராவிட மாடல் அரசு

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் (தமிழ்நாட்டில்) இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். இதுதான் இந்த திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த நோக்கத்துக்கு துணையாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்

விழாவில் பேராசிரியர் பக்தவத்சல பாரதி, சர்மா மரபு கல்வி மையத்தின் நிறுவனர் சாந்தி பாப்பு, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பொதுவியல் ஆய்வு மைய தலைவர் எழுத்தாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், நூலக இயக்குனர் சுந்தர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story