தூத்துக்குடி, நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


தூத்துக்குடி, நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2023 6:45 AM IST (Updated: 21 Dec 2023 9:54 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்ட மழை காரணமாக சாலைகளும், குடியிருப்புகளும் வெள்ளம் சூழ்ந்து குளங்கள் போல் காட்சியளிக்கின்றன.

நெல்லை மாவட்டத்தில் மழை நின்ற நிலையில் தாழ்வான இடங்களில் தேங்கிய வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பொருட்களை மக்கள் அகற்றி வருகிறார்கள். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் தேங்கிய நீர் வடிந்ததால் அங்கிருந்து மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது. பஸ் போக்குவரத்தும் ஓரளவு சீரான நிலையில், அங்கு இயல்பு நிலை படிப்படியாக திரும்பிவருகிறது.

ஆனால் தூத்துக்குடி மாவட்டம் இன்னமும் வெள்ளத்தில்தான் மிதக்கிறது. முத்துநகர் என்று வர்ணிக்கப்படும் தூத்துக்குடி தற்போது வெள்ள நகரமாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த தண்ணீரும் தூத்துக்குடி நகருக்குள் புகுந்தது. இதனால் நகரமே நீரால் சூழப்பட்டுள்ளது.

தொடர் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 18 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர ஏனைய கல்லூரிகள் செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story