20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டுப்பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது


20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டுப்பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது
x

பட்டாபிராமில் 20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டுப்பணம் வசூலித்து ரூ.37 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர்.

சென்னை

ஆவடி அடுத்த பட்டாபிராம் எம்.ஜி.ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 68). இவர் பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த சலூன் கடைக்காரரான முருகன் (52) மற்றும் அவரது மனைவி நிர்மலா (46) ஆகியோரிடம் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரூ.10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் சீட்டு முடிந்ததையடுத்து, முருகையன் அந்த தம்பதியிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் என்று கூறிய முருகன் கடந்த 2015-ம் ஆண்டு திடீரென வீட்டை காலி செய்து விட்டு மனைவியுடன் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த முருகையன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகியோரை தேடி வந்தார். இந்நிலையில் முருகனும் அவரது மனைவியும் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பெங்களூரு சென்ற இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முருகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆவடி அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதையடுத்து, அவர்களை கைது செய்து, நேற்று காலை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முருகையன் உட்பட அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் சீட்டு பணம் வசூலித்து மொத்தம் ரூ.37 லட்சம் வரை முருகன் அவரது மனைவி நிர்மலா ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதுவண்ணாரப்பேட்டை கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சமூத்திரா தேவி (51). இவர் அதே பகுதியில் வசித்து வரும் சுமதி (55) என்பவரிடம் ஏலச்சீட்டு கட்டியுள்ளார். சமுத்திராதேவி உள்பட அவரது நண்பர்கள் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் பணம் கட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏலச்சீட்டு முடிந்து 14 மாதங்கள் ஆன நிலையில் சுமதி யாருக்கும் பணம் தராமல் ரூ.5 லட்சம் வரை ஏமாற்றி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமுத்ராதேவி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சுமதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story