மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை 'தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்'- அண்ணாமலை


மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்- அண்ணாமலை
x

மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

பா.ஜ.க.வில் இணைந்தனர்

சென்னை கமலாலயத்தில் வைத்து, இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டனாக 18 ஆண்டுகள் விளையாடி, இந்திய கூடைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற அனிதா பால்துரைக்கு பா.ஜ.க. சார்பில் கார் ஒன்றை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பரிசாக அளித்தார். அதைத்தொடர்ந்து, சர்வதேச ஆணழகன் போட்டியில் சாம்பியனாக வெற்றி பெற்று, அர்ஜூனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரன் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே தலைமையில் முன்னாள் மாவட்ட நீதிபதி ராஜலட்சுமி, தியாகராயர் கல்லூரி தலைவர் ராமகண்ணன், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என்.முருகவேல் உள்பட மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்வுகளில் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, தமிழக பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. பார்வையாளர் எம்.என்.ராஜா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவர் எஸ்.அமர்பிரசாத் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மருத்துவ படிப்பு செலவை ஏற்கும்

இந்த நிகழ்வின்போது, நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அகிலாண்டேஸ்வரி அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது மருத்துவ படிப்புக்கான செலவுகளை தமிழக பா.ஜ.க. ஏற்கும் என்று அண்ணாமலை உறுதி அளித்தார்.

அதைத்தொடர்ந்து, அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூரில் டீ கடையில் பணியாற்றி வரும் தர்மராஜ் என்பவரின் மகள் அகிலாண்டேஸ்வரி அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் எந்த மாநிலமும் நீட் தேர்வை எதிர்க்காத போது, தமிழகம் மட்டும் நீட் தேர்வை எதிர்க்கிறது. இதுபோன்று அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வித்துறை பாராட்டுவதும் இல்லை.

கருப்பு நாள்

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய மின்கட்டண உயர்வை அறிவித்து இருக்கும் இன்றைய (நேற்று) தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன். அதாவது, அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதாலும், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருப்பதாலும் மக்கள் மறந்து விடுவார்கள் என்ற தைரியத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். இதற்கான பதிலடியை தமிழக மக்கள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாற்றில் காணாத அளவிற்கு பாடம் புகட்டுவார்கள்.

பிரிவினைவாதிகளை சந்திக்கிறார்

ராகுல்காந்தி பாதயாத்திரையின் போது, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் பேசுகிறார். அப்போது ஜார் பொன்னையா, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பற்றி மிகவும் தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறார். அதனை ராகுல்காந்தி புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார். மேலும், கூடன்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்களுடன் பேசுகிறார். இதுதவிர மேலும் நிறைய பிரிவினைவாதிகளை சந்திப்பது தான் ராகுல்காந்தி இந்த பயணத்தின் நோக்கமாக வைத்துள்ளார். இவற்றை பார்க்கும் போது ராகுல்காந்தியின் நடைபயணத்தை 'இந்தியாவை இணைக்கிறேன்' என்பதா? அல்லது 'இந்தியாவை பிரிக்கிறேன்' என்பதா? என்று தெரியவில்லை. இத்தகைய நபர்களை ஊக்குவித்துக் கொண்டு அவர்கள் அருகில் நிற்பதை நமது முதல்-அமைச்சர் பெருமையாக கருதுகிறார்.

காமராஜர் ஆட்சி காலத்தில் கல்விக்கே முதல் மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தை, கல்வியில் பின்தங்கிய மாநிலமான டெல்லியின் முதல்-அமைச்சரை கொண்டு வந்து அவர்கள் மாடலை பின்பற்றுவதாக கூறுவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையையும், அரசு பள்ளிகளையும் உடனடியாக சீர்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story