'எனக்கும் பயமாகத்தான் இருந்தது...' குழந்தையை காப்பாற்றிய நபரின் திக்.திக்.. அனுபவங்கள்


எனக்கும் பயமாகத்தான் இருந்தது... குழந்தையை காப்பாற்றிய நபரின் திக்.திக்.. அனுபவங்கள்
x
தினத்தந்தி 28 April 2024 4:16 PM GMT (Updated: 28 April 2024 4:28 PM GMT)

சென்னை ஆவடியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மேற்கூரையில் சிக்கி தவித்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

சென்னை,

சென்னை ஆவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள மேற்கூரையில் குழந்தை ஒன்று தவறி விழுந்தது. மேற்கூரையின் விளிம்பில் சிக்கி கீழே விழுவது போல் இருந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக குடியிருப்புவாசிகள் ஒன்றுகூடி போராடினர்.

அப்போது பக்கத்துவீட்டை சேர்ந்த நபர் ஒருவர், ஜன்னல் வழியாக ஏறி தனது உயிரை பணயம் வைத்து கீழே விழவிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டார். அவரது அருகில் இருந்தவர்கள் அந்த நபருக்கு உதவி செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இனணயத்தில் வைரலானது.

இந்த நிலையில், தனது உயிரை பணயம் வைத்து குழந்தையை சாதுர்யமாக மீட்ட ஹரி என்ற நபர் கூறியதாவது;

"குழந்தை கூரையில் சிக்கியதை கண்டதும் உடனடியாக மீட்க வேண்டும் என்று நினைத்தோம். அருகில் எனது உறவினர்கள் இருந்தனர். குழந்தை எந்நேரமும் கீழே விழுவது போல் இருந்தது. நாங்கள் எங்களது கைகளை ஒன்றாக சேர்த்து குழந்தையை காப்பாற்ற நினைத்தோம். பின்னர், பால்கனியில் ஏறி குழந்தையை மீட்கலாம் என நினைத்தேன். அது எளிதாக இல்லை. எனக்கும் பயமாக இருந்தது.

உடனடியாக கீழே இருந்தவர்கள், பாதுகாப்புக்காக போர்வையை கொண்டு பிடித்துக்கொண்டு இருந்தனர். இதையடுத்து நான் பால்கனியின் மேலே ஏறினேன். குழந்தையின் சட்டையை பிடித்தால், சட்டை கிழிந்து குழந்தை கீழே விழுந்துவிடக்கூடாது என்பதால், சிறிது முயற்சி செய்து குழந்தையின் கைகளை பிடித்து மீட்டுவிட்டேன். கடவுளின் அருளால் குழந்தை காப்பாற்றப்பட்டது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story