திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் - சீமான்


திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் - சீமான்
x
தினத்தந்தி 28 Aug 2022 9:04 AM GMT (Updated: 28 Aug 2022 11:25 AM GMT)

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களின் அலைபேசிகளைப் பறித்து, அவர்களது தொலைத்தொடர்பை முடக்கியதோடு, அவர்கள் மீது காவல்துறையின் மூலம் கொடுந்தாக்குதலை ஏவிவிடும் திமுக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிங்கள இனவாத அரசின் இனவெறிச்செயல்பாடுகளினாலும், தமிழர்கள் மீதான இனஅழிப்புப் போரினாலும் முற்றிலும் பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்த ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமை தரப்பட வேண்டுமெனும் நெடுநாள் கோரிக்கையை ஏற்பதாகக் கூறும் திமுக அரசு, அவர்களுக்கு ஏதிலிகளுக்குரிய சலுகைகளைக்கூடத் தராது, சட்டவிரோதக் குடியேறிகளெனக்கூறி, சிறப்பு முகாம் எனும் வதைமுகாமில் அடைத்து வைப்பதும், அவர்கள் மீது அடக்குமுறையைச் செலுத்தி சித்திரவதை செய்வதுமான கொடுங்கோல் போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது. கண்முன்னே இரத்தச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடும் இன்னல்கள் கண்டு உள்ளம் கொதிக்கிறேன். எதுவும் செய்யவியலாத நிலையில் இருத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும், ஆளும் அரசின் தமிழர் விரோதப்போக்கும் ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்திய நாட்டுக்கு எந்த விதத்திலும் தொடர்பற்றவர்களான திபெத்தியர்கள் இந்நாட்டில் ஏதிலிகளென அங்கீகரிக்கப்பட்டு, குறைந்தபட்சமான ஒரு நலவாழ்வைப் பாதுகாப்போடு இம்மண்ணில் வாழ்கிறபோது, இந்திய நாட்டைத் தந்தையர் நாடெனப் போற்றிக் கொண்டாடிய ஈழச்சொந்தங்கள் தாய்த்தமிழகத்திலேயே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக்கூறி, முத்திரைக் குத்தப்பட்டு குற்றவாளிகள் போல நடத்தப்படுவதும், கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு நாளும் வதைக்கப்படுவதும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையே மறுத்து, அத்துமீறுவதும், ஈழத்தமிழ்ப்பெண்கள் மீது பாலியல்ரீதியான வன்முறைகளை ஏவிவிடுவதுமான ஆளும் வர்க்கத்தின் செயல்பாடுகள் எதன்பொருட்டும் ஏற்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.

அந்நிலத்தில் சிங்கள அரசுதான் தமிழர்களை வதைக்கிறதென்றால், இந்நிலத்தை ஆளும் திமுக அரசும் அதனையே செய்யுமென்றால், இது தமிழர்களுக்கான அரசா? இல்லை! சிங்களர்களுக்கான அரசா? எனும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 'ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்' என மேடைகளில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின், இன்றைக்கு அவர்களை இரத்தம் சிந்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பதுதான் ஈழத்தமிழர் மீதான பாசமா? அவர்கள் சிந்தும் கண்ணீரும், எழுப்பும் அவலக்குரலும் ஒட்டுமொத்தத் தமிழினத்திற்குமான அவமானமில்லையா? ஈழச்சொந்தங்கள் தமிழ்நாட்டில் தமிழக அரசாலேயே அல்லல்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றார்களென்றால், இது வெட்கித்தலைகுனிய வேண்டிய இழிநிலை இல்லையா? சமூக நீதி ஆட்சியென்று வாய்கிழியப்பேசிவிட்டு, இனப்படுகொலைக்கு ஆளாகி, அடைக்கலம் தேடி வந்த தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கி, அவர்கள் மீது பாசிசத்தைப் பாய்ச்சுவது அரசப்பயங்கரவாதம் இல்லையா? இதுதான் உங்கள் விடியல் ஆட்சியா முதல்வரே? இதுதான் சமூக நீதியைப் பேணும் உங்கள் அரசாங்கமா விடியல் நாயகரே?

இந்திய நிலத்தில் அகதிகளாகப் பதிவுசெய்யப்பட்ட நபர்களைத் தடுத்து, வெளிநாட்டவர் சட்டம் - 1946ன்படி, சிறப்பு முகாம்களில் அடைத்து வைப்பதே சட்டவிதிமீறலெனும்போது, அகதியாகப் பதிவுசெய்த ஈழத்துச்சொந்தங்களைச் சட்டவிரோதமாக உள்நுழைந்த அந்நிய நாட்டவர்களோடு எதற்காக அடைத்து வைக்க வேண்டும்? அவ்வாறு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், உறவுகளுடனும் தொடர்புகொள்வதற்குத் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தவும், மடிக்கணினி போன்ற மின்னனுப்பொருட்களைப் பயன்படுத்தவும் சட்டப்படி எவ்விதத்தடையும் இல்லாதபோது எதற்காக அவற்றை ஈழச்சொந்தங்களிடமிருந்து பறிக்க வேண்டும்? ஏற்கனவே, தாய் நிலத்தையும், குடும்பத்தையும், உறவுகளையும் பிரிந்து, பெரும் மனஉளைச்சலில் இருக்கும் அவர்களை இத்தகைய நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டிய அவசியமென்ன வந்தது? அவர்கள் எந்தவிதத் தவறும் செய்யாதபோதும், ஈழத்தமிழர்கள் என்பதாலேயே அவர்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவது பெரும் அநீதி இல்லையா? வழக்குகளில் சிக்குண்டிருக்கும் அவர்கள், தங்களை அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ள வழக்காடவும், வழக்குச் செலவுகளுக்காக நிதிதிரட்டவும் தொலைத்தொடர்பு என்பது இன்றியமையாததாக இருக்கும்போது, அலைபேசியைப் பறித்து அவர்களை முடக்குவது மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலில்லையா? அவர்களது அலைபேசிகளைப் பறித்து, அவர்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுத்து, அவர்களை உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் தொந்தரவு செய்வது அநியாயத்தின் உச்சமில்லையா? சிறைவாசிகளைக்கூட எவரும் சந்திக்கலாம்; வார நாட்களில் வழக்கறிஞர் நேர்காணல் நடத்தலாம் எனும் வாய்ப்பிருக்கும்போது, சிறப்பு முகாம்களிலுள்ளவர்களை இரத்தத் தொடர்புடையவர்கள் மட்டுமே சந்திக்கலாம்; வட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிபெற்றே வழக்கறிஞர் நேர்காணல் நடத்த வேண்டுமெனும் கட்டுப்பாடுகளானது சிறைச்சாலையைவிட மோசமான நிலையிலுள்ள சிறப்பு முகாம்களின் நிலையையே எடுத்துரைக்கிறது.

அரசுத்தரப்பு தரும் நெருக்கடிகளாலும், இன்னல்களாலும் விரக்தியுற்ற ஈழச்சொந்தங்கள் தற்கொலைக்கு முயன்றும், பட்டினிக்கிடந்தும், ஏற்கனவே ஒரு தம்பி தீக்குளித்த நிலையில், தற்போது செல்வம் எனும் தம்பி தீக்குளித்து, பெருங்காயப்பட்டிருப்பதுமான செய்திகள் பெரும் மனவலியைத் தருகின்றன. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக தம்பி கிருஷ்ணகுமார் நீர்கூட அருந்தாது பட்டினிப்போராட்டம் நடத்தி வருவதால், உடல்நலிவுற்று மிக மோசமான நிலையிலிருக்கிறார். கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, ஈழச்சொந்தங்கள் மீது அடக்குமுறையை இனியும் அரசு ஏவிவிடுமானால், தமிழகம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமென அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

ஆகவே, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட தகவல் தொடர்புச்சாதனங்களைத் திரும்ப அளித்து, அவர்களது தொலைத்தொடர்பைத் துண்டிக்கிற போக்கைக் கைவிட வேண்டுமெனவும், அவர்களைச் சந்திக்க உறவுகளுக்கும், வழக்கறிஞர் நேர்காணலுக்கும் அனுமதியளிக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இத்தோடு, ஏதிலிகளாகப் பதிவு செய்த ஈழச்சொந்தங்களை, சிறப்பு முகாமிலிருந்து விடுவித்து, திபெத்தியர்களுக்கு இந்நாட்டில் செய்துதரப்படுவது போலவே, அடிப்படையான வசதிகளையும், வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கித்தந்து, அவர்களுக்கான உண்மையான மறுவாழ்வை ஏற்படுத்தித் தர வேண்டுமெனக் கோருகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story