அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் தலைவர் பதவி ராஜினாமா; அண்ணாமலை பேச்சு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி


அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் தலைவர் பதவி ராஜினாமா; அண்ணாமலை பேச்சு பற்றி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
x

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது 1 கோடியே 46 லட்சம் தொண்டர்களின் விருப்பம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.சென்னை,


அ.தி.மு.க. பொது செயலாளர் பற்றிய தேர்தல் அறிவிப்பு வெளிவந்து உள்ள நிலையில், அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது எங்களது விருப்பம் மற்றும் 1 கோடியே 46 லட்சம் தொண்டர்களின் விருப்பம் ஆகும்.

அந்த அடிப்படையில் கழக சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைமுறை தொடங்கி விட்டது. அதனால், நான் தேர்தல் பற்றி எதுவும் பேச கூடாது. தேர்தல் ஆணையாளர்களே பிற விசயங்களை பற்றி பேசுவார்கள் என்று கூறினார்.

இந்த பேட்டியின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் பட்சத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த அளவுக்கு வெறுப்பு ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்றும் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுவெளியில் நடக்க கூடிய ஒரு கூட்டத்தில் பேசியது பற்றி நாம் கருத்து தெரிவிக்கலாம்.

ஆனால், அவர்களது கட்சிக்குள், கட்சியினர் மத்தியில், உள்ளரங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசியவற்றுக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. அவர் என்ன பேசினார் என எனக்கு தெரியாது. பத்திரிகையில் வந்த செய்திகளையும் நம்ப முடியாது. அதனால், இதுபற்றி கட்சியே முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.


Next Story