குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர்


குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:40 AM GMT)

குலசேகரன்பட்டினத்தில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரிடம் பணத்தை பறித்த 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பணப்பையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் பட்டப்பகலில் பெட்ரோல் பங்க்கில் ஊழியரை தாக்கி பணப்பையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெட்ரோல் பங்க்கில் வழிப்பறி

குலசேகரன்பட்டினம் தெற்குதெருவை சேர்ந்தவர் மகராஜன் (வயது 67). இவர் குலசேகரன்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெட்ரோல் பங்க்கிற்கு கடந்த நேற்று முன்தினம் மதியம் மோட்டார்சைக்கிள் வந்த 2 வாலிபர்கள், திடீரென்று மகராஜனை தாக்கி, அவரிடமிருந்து பணப்பையை பறித்துச் சென்றனர்.

அடையாளம் தெரிந்தது

இதுகுறித்து மகராஜன் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து பணம் பறித்துச் சென்றவர்கள், நாகர்கோவில் மறவன்குடியிருப்பு மாதாமஹால் தெருவை சேர்ந்த ராஜ்குமார் மகன் நவீன் (19), அவரது நண்பர் நாகர்கோவில் புன்னைநகர், தளவாய்புரத்தைச் சேர்ந்த 15 வயது இளஞ்சிறார் என்பது தெரியவந்தது.

2 பேர் சிக்கினர்

இதனையடுத்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் அந்த 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.அவர்களிடமிருந்து பணம் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்விசாரணையில் அந்த 2பேர் மீதும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.


Next Story