நாகையில், விவசாயிகள் உண்ணாவிரதம்


தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைத்து வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

உண்ணாவிரதம்

அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகை அவுரித்திடலில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை வன்மையாக கண்டிப்பது, நீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் திரைப்பட இயக்குனர் களஞ்சியம், சமூக ஆர்வலர் சவுந்தரராஜன், அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க கதிரவன், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடைகள் அடைப்பு

இதேபோல் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து திருமருகல் அருகே திருப்புகலூரில் வணிகர் சங்கத்தினர் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் ஓடவில்லை. கடை அடைப்பு போராட்டத்தால் திருப்புகலூரில் கடைவீதி வெறிச்சோடி கிடந்தது.

1 More update

Next Story