தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு


தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
x

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந் தேதி முடிவடைகிறது. 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேசிய, மாநில கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தற்போதே தொடங்கி உள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்காக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இரட்டை பதிவு, இறப்பு போன்ற காரணங்களினால் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 985 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பல்வேறு தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 17 வயது நிறைவடைந்து ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் 1-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்றும், எந்த தேதியில் அவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைகிறதோ அப்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ஏராளமானோர் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். அதேபோன்று முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகளுக்காகவும் பலர் விண்ணப்பம் கொடுத்தனர். மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 35 பேர் விண்ணப்பம் அளித்ததாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பெயர் சேர்த்தல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்த்த வாக்குச்சாவடி அலுவலர்கள், இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினர். வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயர் 2 இடங்களில் இருக்கும்பட்சத்தில், அதனை கண்டறிய நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கண்டறியப்பட்ட வாக்காளர்களுக்கு, வாக்குச்சாவடி அலுவலர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டு எந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற வேண்டும் என அவரது விருப்பத்தை கேட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இன்று (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு வெளியிடுகிறார். அதேவேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர்கள் இதனை வெளியிடுகின்றனர்.

சென்னையை பொறுத்தமட்டில் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.


Next Story